பேத்தி வயது சிறுமிக்கு படுக்கையறையில் நரகத்தை காட்டிய மனித மிருக சாமியார்.. உள்ளே தள்ளிய 'ஒரு ரயில் பயணம்' - கர்மா அழியாது பூர்ணாநந்தா..!
ஆந்திராவில், 15 வயது சிறுமியை 2 ஆண்டுகள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரை, போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆசாராம் பாபு, சிவசங்கர் பாபா என, கடவுளின் அவதாரமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், பாலியல் பலாத்கார சர்ச்சையில் சிக்கியது தெரிந்ததே... அதே பாணியில்,
தாய், தந்தையை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை, சங்கிலியால் கட்டிப்போட்டு பாலியல் சித்திரவதை செய்து வந்த சாமியாரின் சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வெங்கோஜிபாலம் பகுதியில் சுவாமி ஞானானந்தா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் 63 வயதான சாமியார் பூர்ணாநந்தா. இவர், அதே பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த ஆதரவற்றோர் இல்லத்தில், 12 சிறுவர் மற்றும் சிறுமிகள் தங்கி வந்துள்ளனர். இதில் தங்கி வந்த ஒரு சிறுமியின் கூக்குரல்தான், சாமியார் பூர்ணாநந்தாவின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
சிறுவயதில் தாய், தந்தையை இழந்த சிறுமியை, அவரது உறவினர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
பேத்தி வயதில் உள்ள சிறுமியை, 63 வயதான சாமியார் பூர்ணாநந்தா, கட்டாயப்படுத்தி அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது தான் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஓராண்டாக சிறுமியை, தனது படுக்கை அறையிலேயே சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்தியுள்ள சாமியார், அந்த சிறுமிக்கு போதுமான உணவும் கொடுக்காமல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, சாமியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்த சிறுவர், சிறுமிகள், மாட்டு கொட்டகையில் பணியில் அமர்த்தி கொடுமைப்படுத்தப்பட்டதால், அதில் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்தில், சாமியாரால் சிறுமி படும் துயரத்தைக் கண்டு வேதனை அடைந்த, அந்த ஆசிரமத்தின் பணிப்பெண் ஒருவர், சிறுமியை அங்கிருந்து தப்பிக்க வழிவகை செய்துள்ளார்.
அதன்படி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆசிரமத்தில் இருந்து தப்பிய சிறுமி, விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயாவடா செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயிலில், ஏக்கத்துடனும், ஒருவித பயத்துடனும் பயணம் செய்த சிறுமிக்கு, சக பெண் பயணி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அச்சத்துடன் காணப்பட்ட சிறுமியின் முகத்தை புரிந்துகொண்ட பெண் பயணி, ஆதரவாக பேச, தனக்கு நேர்ந்த துயரங்களை, வெள்ளம் சூழ்ந்த கண்களால் கனத்த இதயத்துடன் பகிர்ந்துள்ளார் சிறுமி...
சிறுமியின் கதையை கேட்டு மனவேதனை அடைந்த பெண் பயணி, சிறுமிக்கு அடைக்கலம் கொடுக்கும் பொருட்டு, விஜயவாடா புறநகர் பகுதியில் உள்ள விடுதியில் சேர்த்துள்ளார்.
அப்போது விடுதியின் உரிமையாளரிடம், சாமியார் பூர்ணாநந்தாவால் நடந்த கொடூரங்களை விவரிக்க, அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, விஜயவாடா காவல்நிலையத்தில், சிறுமி புகார் அளிக்கவே, அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, சாமியாரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
அதனைத் தொடர்ந்து, விஜயவாடா போலீசார் விசாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, தன்னை கடவுளாக பாவித்து பக்தர்களை ஏமாற்றி வந்த சாமியார் பூர்ணாநந்தாவை உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாமியார், ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு வேறொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது, ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.