ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்..திக்குமுக்காடி பின்னாடியே ஓடிய கேட்மேன்- தள்ளாடிய 'குடி' மகன்..ஜஸ்ட் மிஸ்ஸு...

x

கேரளாவில், சாலை என நினைத்து ரயில்வே தண்டவாளத்தில் காரை பார்க் செய்த மதுப்பிரியரின் செயலால் ரயில்வே கேட்மேன் பரிதாபத்துக்குள்ளான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பீடிகை ரயில்வே கேட் பகுதி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் இந்த ரெயில்வே கேட்டை தாண்டிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்திலேயே ஓடியது.

தண்டவாளத்தில் கார் செல்வதை பார்த்த ரயில்வே கேட் மேன், காரின் பின்னால் ஓடியபடி காரை நிறுத்தச் சொல்லி கூச்சலிட்டுள்ளார். ஆனாலும், கார் நிற்காமல் சென்றதால், ரயில்வே கேட் மேன் அதிர்ச்சி அடைந்தார். ஒரு கட்டத்தில் அங்கும் இங்கும் நகர முடியாமல் கார் தண்டவாளத்தில் சிக்கியது.

பெருமூச்சு விட்ட ரயில்வே கேட்மேன், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காரை தண்டவாளத்தில் இருந்து மீட்க முயன்றனர். ஆனாலும், கார் சற்றும் நகராததால் அவஸ்தைக்குள்ளாகினர்.

ஆனால் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், காரில் உள்ளே இருந்த உரிமையாளர், குடிபோதையில் தள்ளாடினார். காரையே ஸ்டார்ட் செய்யாமல், போதை ஆசாமி கியர் போட்டு ஆக்சலேட்டரை மிதித்துக் கொண்டிருந்ததால், கார் ஒரு இன்ச் கூட நகராதது அவருக்கு தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் காரை நகர்த்த முடியாமல் ரயில்வே கேட்மேன் மற்றும் அங்கிருந்தவர்களின் நிலைமை, வடிவேலு காமெடியில் வருவதுபோலவே மாறிப்போனது...

பின்னர் பத்திரமாக தண்டவாள பகுதியில் இருந்து கார் போராடி மீட்டு, ரயில்வே கேட் பகுதிக்கு போலீசார் கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபரை விசாரித்ததில், அஞ்சரகண்டி கொழும்பிலானை பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என தெரியவந்தது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் மீது ரயில்வே பாதுகாப்பின் கீழ் கண்ணூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்