உடலில் பரவிய ஆபரேஷன் மயக்க மருந்து... பல நாட்கள் மாணவிக்கு நடந்த சித்திரவதை - நாட்டை உலுக்கிய மரணம்

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காகடியா மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் ப்ரீத்தி.

இவர் தன்னுடன் பயிலும் மாணவிகளுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இதில், இரவு நேர பயிற்சியின் போது மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில், ப்ரீத்தி சுயநினைவற்று மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததை சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விசாரணையில், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் மயக்க ஊசியை, தனது உடலில் அதிகளவில் செலுத்தி ப்ரீத்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

இதன் அடிப்படையில் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், வாட்ஸ்அப்பில் பதிவாகியிருந்த சேட்கள் மூலம் மாணவிக்கு சீனியரால் ராகிங் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, கல்லூரி மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியின் சீனியரான முகமது சயீஃப் என்பவர் மாணவிக்கு ராகிங் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதில், பயிற்சியின் போது சங்கடத்துக்கு உள்ளாக்கும் விதமாக மாணவியிடம் வேலை வாங்கியும், சில அவச்சொற்களால் அவரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து சயீஃப் ராகிங் செய்தும், அவதூறாக பேசியும் வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே பெற்றோரிடம் மாணவி புகாரளித்ததாகவும், இந்த புகார் கல்லூரி நிர்வாகம் வரை சென்ற நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் சயீஃபை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் சாதியை குறிப்பிட்டு இளைஞர் ராகிங் செய்ததாக தகவல் பரவியதையடுத்து, மருத்துவமனை முன்பு சில பழங்குடியின அமைப்புகள் போராட்டம் நடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மாணவியின் இறப்பில் உரிய நீதி வேண்டி கல்லூரி மாணவர்களும், மாணவியின் பெற்றோரும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்திருக்கிறார்.

காலங்கள் கடந்தும் பேதமற்ற உறவின் எடுத்துக்காட்டாய் கூறப்படும், மாணவர்களின் மத்தியில் ராகிங் கொடுமையால் தற்கொலைகள் அரங்கேறி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவத் துறையில் பல தடைகளை தாண்டி முதுகலை வரை சென்ற மாணவி, ராகிங் கொடுமையால் வீழ்ந்து போன சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்