இறந்துவிட்டதாக கூறி ரேஷன் கார்டு-ல் இருந்து நீக்கிய அதிகாரிகள்... மாற்றுத்திறனாளி அதிர்ச்சி
இறந்துவிட்டதாக கூறி ரேஷன் கார்டு-ல் இருந்து நீக்கிய அதிகாரிகள்... உயிரோடு இருக்கும் மாற்றுத்திறனாளிக்கு அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உயிருடன் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண் இறந்துவிட்டதாக கூறி, அவருடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.திருவிடைமருதூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருக்கு மாற்றுத்திறனாளியான அமுதா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், பாலச்சந்திரன்தான் பெரும்பாலான நேரங்களில் ரேசன் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பாலச்சந்திரன் வெளியூர் சென்றதால் அவரது மனைவி அமுதா ரேசன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, பொருள்களை வாங்குவதற்காக கை ரேகை சரிபார்க்கும் சாதனத்தில் அமுதாவின் கைரேகைகள் பதிவாகவில்லை எனக்கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனார். இதனால், குழம்பி போன தம்பதி இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, சில மாதங்களுக்கு முன்பு அமுதா உயிரிழந்தவிட்டதாக கூறி அவரின் பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கியதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதி, இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.