வீட்டை எழுதித் தர மறுத்த உரிமையாளரை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்த வடமாநில இளைஞர்கள்
பெங்களூருவில் வீட்டு உரிமையாளருக்கு உதவி செய்வதுபோல் நெருங்கி பழகி வந்த வடமாநிலத்தவர்கள், ஒரு கட்டத்தில் வீட்டையே தங்களின் பெயரில் எழுதிகொடுக்க கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பார்க்கலாம் விரிவாக...
பெங்களூருவின் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா அருகே ஜனதா காலனியை சேர்ந்தவர் கீதம்மா. 54 வயதான இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரையும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவனை இழந்த கீதம்மா, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுத்ததால், தனியே வசித்து வந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.
தனக்கு சொந்தமான 2 வீட்டில், ஒன்றில் வசித்து வந்த அவர், மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்ட நிலையில், அதில் பீகாரை சேர்ந்த 3 இளைஞர்கள் தங்கியிருக்கின்றனர்.
கீதம்மா தனியே வசித்து வந்ததால், அவரிடம் கரிசனம் காட்டி பேசிய இளைஞர்கள், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து நெருங்கி பழகி வந்துள்ளனர்...
இந்நிலையில், கடந்த மே 28 ஆம் தேதி கீதம்மா திடீரென காணாமல் போன நிலையில், இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த ஜூன் 1ஆம் தேதி கீதம்மாவின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் கவரில் வைத்து வீசப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு, கீதம்மாவின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 3 பீகார் இளைஞர்களும் மே 28 ஆம் தேதியிலிருந்து மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்தியது....
இதையடுத்து, பங்கஜ் குமார், இந்தல் குமார் மற்றும் கௌதம் குமார் உள்ளிட்ட 3 பீகார் இளைஞர்களை தேடி பீகார் விரைந்த போலீசார், அங்கு இந்தல் குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர்...
இந்தல் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
பீகார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த பங்கஜ் குமார் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே கீதம்மாவின் வீட்டில் வாடகைக்கு குடியேறியிருக்கிறார். அதன் பின்பே அவருடைய சொந்த கிராமத்தை சேர்ந்த இந்தல் குமாரும், கௌதம் குமாரும் பீகாரில் இருந்து இடம்பெயர்ந்து பங்கஜ் குமாருடன் தங்கியிருக்கின்றனர்...
அப்போதுதான், தனியே வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் கீதம்மாவிடம் மூவரும் கரிசனம் காட்டியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தும் அவரிடம் நெருக்கமாகியிருக்கின்றனர்...
இந்நிலையில், கீதம்மாவுக்கு ஆண் வாரிசுகள் யாரும் இல்லாததை மனதில் நிறுத்திய மூவரும், அவருக்கு பெண் வாரிசுகள் மட்டுமே உள்ளதால், அவர்களும் திருமணமாகி சென்ற நிலையில், கீதம்மாவின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர்...
இதன்படி அவர்கள் வசித்து வந்த வீட்டை, தங்கள் பெயரில் எழுதி கொடுக்குமாறு கேட்டு கீதம்மாவை நிர்பந்தப்படுத்தியுள்ளனர்....
விளையாட்டுத்தனமாய் கேட்கிறார்கள் என்று ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமலிருந்த அவர், அதன் பின்பு அவர்களின் நடவடிக்கையும், மிரட்டும் தொணியிலான பேச்சையும் கண்டு மூவரையும் எச்சரித்த கீதம்மாள், நான் இருக்கும் வரை இந்த வீடு என்னுடயதென்றும், எனக்கு பின்பு தனது மகள்களுக்கே வீட்டினை எழுதி கொடுப்பேன் எனவும் கூறியிருக்கிறார்...
இதனால், ஆத்திரமடைந்த பங்கஜ் குமார், தன்னுடன் பணிபுரிந்த வந்த நான்கு இளைஞர்கள் மற்றும் உடன் வசித்து வந்த இந்தல் குமார் மற்றும் கௌதம் குமார் என ஏழு பேரை அழைத்துக் கொண்டு, கீதம்மாவை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்...
அதன்படி வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த செல்போன் வயரை, கீதம்மாவின் கழுத்தில் சுற்றி நெறித்து கொன்றிருக்கின்றனர்...
அதிக உடல் எடை கொண்ட அவரின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த கும்பல், கீதம்மாவின் உடலை கை, கால், தலை என துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரினுள் அடைத்து காலனியை சுற்றி வீசியுள்ளனர்.
இந்தல்குமாரை வைத்து மற்ற 6 பேரையும் கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...