நிலாவை தொடப்போகும் கடைசி 100 கி.மீ... ’சந்திராயன் 2’ தோல்வி கண்ட இடம் ’சந்திராயன் 3’-ன் சவாலான பயணம் - திக் திக் 15 நிமிடங்கள்...
நிலவை நோக்கிய சந்திரயான் 3 பயணத்தின் முக்கிய தருணங்கள் இப்போது பார்க்கலாம்....
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்- 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்புகிறது. ராக்கெட்டின் கூம்பு பகுதியிலே விண்கலம் இருக்கும். விசை கொடுக்கப்பட்டதும் ராக்கெட்டிற்கு இருபுறம் இருக்கும் திட எரிபொருகள் எரியவும் வேகத்தில் தரையிலிருந்து புறப்படும்.
திட எரிபொருள் கலன் விழுந்ததும் திரவ எஞ்சின் செயல்படும். உயரே சென்றதும் கிரையோஜெனிக் எஞ்சின் செயல்பட விண்கலம் பூமியிலிருந்து 179 கிலோ மீட்டர் உயரத்தில் விண்வெளியில் நிறுத்தப்படும்.
விண்வெளியை அடைந்ததும் கூம்பு பகுதி திறந்து சந்திரயான் 3 விண்கலம் வெளியேறும்.
புவி சுற்று வட்டப்பாதையில் விண்கலம் நிறுத்தப்பட்டதும், நீள்வட்டப் பாதையில் சுற்ற தொடங்கும்.
அதற்கான உந்து விசையை கொடுத்து விண்கலத்தை சுற்ற செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு சுற்றுப்பாதைக்கும் விண்கலத்தை உயர்த்த வேண்டும்.
இதற்கான உந்துவிசையை கொடுக்கும் போது நிலவின் ஈர்ப்பு விசையையும், சுற்றுப்பாதையையும் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
பூமியின் ஈர்ப்பு விசையும், நிலாவின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும் பகுதியிலே விண்கலத்தை பாதை மாற்ற முடியும். அதாவது நிலவின் சுற்றுப்பதைக்கு அனுப்ப முடியும்.
அந்த சம ஈர்ப்பு விசைப்புள்ளியானது, நிலவிலிருந்து 62 ஆயிரத்து 630 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்த பாதையை எட்டியதும் உந்துவிசையை கொடுத்து விண்கலத்தை இயக்க வேண்டும்.
அப்படி செல்லும் போது மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்துவிடாத வகையில், கொஞ்சம் கொஞ்சமாக பூமியைவிட்டு விண்கலத்தை விலக வேண்டும். பின்னர் நிலவின் சுற்றுப்பாதையில் சரியாக விண்கலத்தை உந்துசக்தி கொடுத்து சுற்ற வைக்க வேண்டும்.
நிலாவில் தரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலத்தை நிறுத்த வேண்டும். அதே தொலைவில் விண்கலத்தை நிலவில் சுற்ற செய்ய வேண்டும். அதற்கு பின்னர்தான் மிகவும் சவாலான பணியே இருக்கிறது.
அதாவது விண்கலத்தில் உந்துகலனையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும். லேண்டருக்கு கீழ் இருக்கும் சிறிய ராக்கெட்களை கவனமாக எரித்து தரையிறக்க வேண்டும்.
இதற்கு வெறும் 15 நிமிடங்களே விஞ்ஞானிகள் கையில் இருக்கும் கால நேரம்... கடந்த முறை சந்திராயன் 2 விண்கலம் இந்த கட்டத்தில்தான் லேண்டர் விழுந்து தோல்வியை தழுவியது.
இப்போது அது நடக்காத வகையில் லேண்டர் தொழில்நுட்ப உதவியுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
லேண்டர் பத்திரமாக தரையிறங்கியதும் அதன் வயிற்று பகுதியிலிருந்து ரோவரை வெளியே கொண்டுவர வேண்டும். லேண்டர் திறக்கவும் சாய்வுதளம் வாயிலாக இறங்கும் ரோவர் நிலவில் தடம்பதிக்கும்.
இத்தனை சவால்களையும் கடந்தும் இம்முறை இஸ்ரோ சாதிக்கும் எனவே நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.