3 நாட்களாக கலங்கடித்த சம்பவம்.. 300 அடி ஆழ்துளையில் 100அடியில் குழந்தை.. மயங்கிய நிலையில் தூக்கியும் தோல்வி..

x

ஆழ்துளை கிணற்றினுள் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை... சுமார் 3 நாட்களாக மத்திய பிரேதச மாநிலத்தை பதைபதைக்க செய்த நிலையில், இ து குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

அவ்வளவு எளிதில் மறத்திட முடியாது... "சுஜித் மீண்டு வா" என்ற ஹேஷ்டேக் மூலம் தமிழகத்தையே உலுக்கிய துயர சம்பவம்.....

கடந்த 2019 ஆம் ஆண்டு வாண வேடிக்கையுடன் தீபாவளியை கொண்டாட இருந்த தமிழகமே, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்டு விட வேண்டும் என்ற பதைபதைப்பில் இருந்தது....

அமைச்சர்கள் முதல் தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர் என பெரும் படையே ஏதேதோ உக்திகளை மேற்கொண்டு சிறுவனை மீட்க முயற்சி செய்தும் எதுவும் பலனளிக்காமல் சிறுவனை சடலமாகவே மீட்க முடிந்தது....

இதற்கடுத்து, ஆழ்துளை கிணறு தொடர்பான விழிப்புணர்வையும், பராமரிப்பு சம்பந்தப்பட்ட வழிகாட்டுதலையும் எவ்வளவுதான் தீவிரப்படுத்தினாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆழ்துளை கிணறு சில உயிர்களை காவு வாங்கி கொண்டுதான் இருக்கிறது...

இந்த வரிசையில் மத்திய பிரேதசத்தில் சரியாக மூடப்படாமலும், அலட்சியமாக கிடப்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு இரண்டரை வயது குழந்தையின் உயிரை பறித்திருக்கிறது....

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில், கடந்த 6 ஆம் தேதி சிருஷ்டி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்துள்ளது....

அப்போது அருகில் உள்ள விவசாய நிலத்தில், பயன்பாட்டில் இல்லாத 300 அடி ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது... அதன் அருகே சென்ற குழந்தை, கிணற்றினுள் தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

குழந்தையை காணாததை கண்டு தேட ஆரம்பித்த பெற்றோர், ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்ததை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தனர்...

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர், 300 அடி கிணற்றினுள் விழுந்த குழந்தை 30 அடியில் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர்...

இந்நிலையில், அருகே பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சித்த போது, இதனால் ஏற்பட்ட அதிர்வால் குழந்தை 30 அடியில் இருந்து 100 அடிக்கு கிணற்றினுள் இறங்கியது பெற்றோருக்கு பதைபதைப்பையும், மீட்பு படையினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது....

இதன்பின்பு குஜராத்தில் இருந்து குழந்தையை மீட்க ரோபோடிக்ஸ் கருவிகளை வரவழைத்து அதன் மூலம் குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு படையினர் இறங்கினர்....

சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மயக்க நிலையில் மீட்ட அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது....

குழந்தையின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த மத்தியபிரேதச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்...

இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஆழ்துளை கிணற்றினுள் விழுந்து சுமார் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றினுள் விழுந்தவர்களை மீட்கும் பணியானது 70 சதவீதம் தோல்வியில் முடிந்திருப்பதாகவும் புள்ளிவிபரம் கூறுவது அதிர்ச்சிக்குரிய ஒன்று...

அதோடு, இந்தியாவில் சுமார் 27 மில்லியன் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்டுள்ளதாகவும், அதில் பல கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் அவை அப்படியே பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது...

இந்தியாவில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கைகளை அதிகாரிகள் கணக்கெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இதுபோன்ற விபத்தை தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நாம், அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளை நாமே தக்க பாதுகாப்புடன் மூடி வைத்தும், அதன் உரிமையாளரை எச்சரித்தால் இதுபோன்ற மற்றொரு துயரம் ஏற்படாமல் தடுக்க முடியும்.....


Next Story

மேலும் செய்திகள்