நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கணவன் மனைவி தற்கொலை முயற்சி...பல்லடத்தில் பரபரப்பு
பல்லடம் நீதிமன்றத்தில் திருட்டு வழக்கில் வாய்தாவிற்க்கு ஆஜராக வந்த கணவன் மனைவி தற்கொலை முயற்சி....
நீதிமன்ற வளாகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு....
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பகவுண்டன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வயர் மற்றும் ரேடியட்டர் திருட்டு வழக்கில் 6 மாதத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஒருமாதம் கழித்து கருப்பசாமி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகு தனது மனைவி மஞ்சுளா மற்றும் 3 ஆண் குழந்தை 1 பெண் குழந்தையுடன் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மீதான திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வாயிதா வாங்கி 6 மாதம் காலமாக ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் குற்றவியல் நீதிபதி கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்ததையடுத்து, கருப்பசாமியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது தன்னை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்து விடுவார்களோ என தவறாக எண்ணி, நீதிமன்ற வளாகத்தில் பிளேடு போன்ற ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொண்டும் மனைவி மஞ்சுளா கையை அறுத்து கொண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டனர்.
இதனையடுத்து நீதிமன்ற வளாகம் பரபரப்பானது. அங்கிருந்த போலீசார் இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பல்லடம் போலீசார் கருப்பசாமி மற்றும் மஞ்சுளா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.