பிரமாண்டத்தின் உச்சம்..! புதிய நாடாளுமன்ற கட்டடம்... உள்ளே இருக்கும் வித்தியாசமான அம்சங்கள்.. வெளிவந்த புது தகவல்...!
முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.
2019ல், 20,000 கோடி ரூபாய் செலவில், புது டெல்லி சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டம் தொடங்கப் பட்டது. இதன் ஒரு பகுதியாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால், 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
இதில் பிரம்மாண்டமான அரங்குகள், நூலகம், மிகப் பெரிய வாகன நிறுத்தம் மற்றும் அமைச்சர்கள், நிலைக் குழுகளுக் கான அலுவலகங்கள் அதி நவீன வசதிகளுடன் உருகாப் பட்டுள்ளன.
தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே, 65,000 சதுர மீட்டர் பரப்பளவில், நான்கு தளங்கள் கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மக்களவை அரங்கில் 888 இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன. இரு அவைகளின் கூட்டு அமர்வின் போது 1,272 உறுப்பினர்கள் வரை இதில் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு இந்தியாவின் தேசிய பறவையான மயிலை கருப்பொருளாக கொண்டுள்ளது.
தேசிய மலரான தாமரையை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட மாநிலங்களவையில் 384 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய கட்டிடத்தில், மிக நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய, பெரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர தேவையான வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது. 2020 டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடியால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த கட்டிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என கூறப் படுகிறது.