2019 முதல் இயக்கப்பட்டு வந்த அரசு கார்.. இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் இயங்கியது அம்பலம்.. சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்

x

2019 முதல் இயக்கப்பட்டு வந்த அரசு கார்.. இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் இயங்கியது அம்பலம்.. சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்

கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு, தமிழக அரசு சார்பில் இனோவா கார் ஒன்று வழங்கப்பட்டது.

அந்த காருக்கு பேன்சி நம்பராக, TN 55 BG 0001 நம்பரும் கார் பிளேட்டில் எழுதப்பட்டது. அமைச்சரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில், அவர் இல்லாத நேரத்தில், அந்த மாவட்டத்திற்கு வேறு யாராவது விஐபி வந்தால், அவர்களுக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திருமயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரகுபதி சட்டத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த இன்னோவா காரை, அமைச்சர் ரகுபதி பயன்படுத்தி வருகிறார். புதுக்கோட்டைக்கு அமைச்சர் வரும்போது, நிகழ்ச்சிகளில் பங்கேற்க, இந்த இன்னோவா காரைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக, கடந்த 2019ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இன்னோவா காருக்கு, நம்பர் கொடுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காரின் எண் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில், வாகன விபரங்கள் அறியும் செயலியைக் கொண்டு, வாகனங்களின் உரிமையாளர்கள் பெயர், வாகனம் வாங்கப்பட்ட வருடம், அதன் மாடல் உள்ளிட்டவற்றை அறிய, காரின் எண்ணை வைத்து சோதனை செய்ததில், பதிவு செய்யப்படாத எண் என தெரியவந்தது. மேலும் வாகனம் பதிவு செய்யப்படாமல் உள்ளதால் இன்ஸ்யூரன்ஸ் இல்லாமலும் இத்தனை நாட்களாக வாகனத்தை இயக்கி வந்தது தெரியவந்திருக்கிறது...

அமைச்சர்கள் பயன்படுத்தும் காரையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், 3 ஆண்டுகளாக பதிவு செய்யாமல் இருப்பதும் அது சாலைகளில் இயக்கப்பட்டு வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்