போலீசாரையே ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல்...திருச்சியில் பரபரப்பு

x

மணப்பாறை அருகே கணவன் - மனைவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் பிடிக்க முயன்ற போது கத்தியை காட்டி மிரட்டி தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆபிசர்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த பழனியப்பன், சந்திரா தம்பதி.

மகன், மகள் என குடும்பத்துடன் வசித்து வரும் இவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தம்பதியை, திருச்சி அருகே வழிமறித்த ஒரு கும்பல், தங்களை போலீஸ் எனக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக காரில் கடத்தி சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில், பழனியப்பனின் மகனுக்கு போன் செய்து பணம் எடுத்து வருமாறு கூறவே, அவர்கள் கடத்தல் கும்பல் என தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வையம்பட்டி அருகே எளமணம் என்ற இடத்தில் காரை மடக்கிய போது, அந்த கும்பல் போலீசாரையே ஆயுதங்களை காட்டி மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து தம்பதியை மீட்க போலீசார் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், திண்டுக்கல்லில் இருவரையும் இறக்கி விட்டுச் சென்ற கும்பல், அவர்களிடம் இருந்த 10 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, பழனியப்பனின் மகன் கலைச்செல்வனிடம், பணம் பெறுவதற்காக சென்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பணத்திற்காக இருவரும் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்