தவறு மருத்துவர்கள் மீதா..? மருத்துவமனையில் நடந்தது என்ன ? வெளியான அறிக்கை Vs தாயார்
சென்னை அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது சிறுவனின் கை அகற்றப்பட்டது குறித்த விசாணை குழுவின் அறிக்கை பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டதற்கு அலட்சியமான சிகிச்சையே காரணமா? என்பது குறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக் குழுவில் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் டாக்டர் என்.ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் டாக்டர் பி.எஸ்.சாந்தி மற்றும் ரத்தவியல் பிரிவின் தலைவர் டாக்டர் சி.ரவீந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில்,
குறைப் பிரசவத்தில் பிறந்த முகமது மஹீர் என்ற குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையும், மூளை மண்டலத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையில் ஏற்பட்ட அடைப்பினால் தலை வீக்கமும் ஏற்பட்டது.
5 மாத குழந்தையாக இருந்த போது, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம், மூளை மண்டலத்தில் இருந்து வயிற்று பகுதிக்கு V-P Shunt எனப்படும் ஒரு நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டது.
V-P Shunt குழாய், குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறத் தலைப்பட்டதால், ஜூன் 25 மாலை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை தொடங்கப்பட்டது.
அன்று இரவு அறுவை சிகிச்சை மூலம் புதிய V-P Shunt குழாய் பொருத்தப்பட்டது.
ஜூன் 26ல் குழந்தையின் மூளை தண்டுவட திரவம் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் சூடோநாமஸ் என்ற நுண் கிருமி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைக்கு மூளைத் தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 29ல் குழந்தையின் வலது கையில் சிகப்பு நிறம் மற்றும் வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனையின் போது இது ரத்த நாளங்கள் அழற்சி என்று முடிவு செய்த மருத்துவர்கள், அதற்கான சிகிச்சையை அளித்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் ஜூலை ஒன்றில், வலது கையின் நிறம் மாற்றம் அதிகரித்து, கை அசைவு குறைந்து விட்டதால், இரத்த நாளப் பிரிவு மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்டது.
Doppler பரிசோதனையில், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. ரத்த நாள அடைப்பினால் கையின் தசைகள் முற்றிலும் செயலிழந்தது உறுதி செய்யப்பட்டது.
வலது கையை காப்பாறுவது கடினம் என்றும், உடனடியாக அதை அகற்றாவிட்டால், உயிருக்கு ஆபாத்து ஏற்படும் என்பதால், அன்று மாலை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு, செயல் இழந்த கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மருந்துகளினாலோ மற்றும் சிகிச்சை முறைகளினாலோ, ரத்த நாள அடைப்பு ஏற்படவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சூடோநாமஸ் கிருமியினால் ஏற்படும் மூளைத் தொற்று, ரத்த நாளத்தை பாதித்ததால், இந்த குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு, உயிரை காப்பற்ற, வலது கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.