'லாயக்கு இல்லை'.. அரசு பஸ்ஸை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்.. மறுநாளே வந்த ஆக்சன் - அதிர்ச்சி கொடுத்த அதிரடி உத்தரவு

x

பழுதாகிபோன அரசுப்பேருந்தை சரி செய்யாமல் தொடர்ந்து இயக்க வைப்பதாக கூறி, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேருந்தை ஒப்படைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

கன்னியாகுமரி மாவட்டம் ராணித்தோட்டத்தில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ஒன்றாவது பணிமனையில் பணிபுரிந்து வந்தவர் ஓட்டுநர் பெர்க்மான்ஸ்....

இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நெல்லை - நாகை வழித்தடத்தில் இயங்க கூடிய அரசுப் பேருந்தை இயக்கி வந்திருக்கிறார்...

இந்நிலையில், தான் இயக்கிவரும் அரசு பேருந்து பழுதாகி மோசமான நிலையில் உள்ளதெனவும், இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகாரளித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என குற்றம் சுமத்திய ஓட்டுநர் பெர்க்மான்ஸ்.... நெல்லையிலிருந்து நாகர்கோயிலுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது... திடீரென நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று பழுதாகிபோன அரசுப்பேருந்தை சரி செய்யாமல் தொடர்ந்து இயக்க வைப்பதாக கூறி பேருந்தை ஒப்படைத்தது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது....

இதையெடுத்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட பேருந்தை அதிகாரிகள் இயக்கி ஆய்வு செய்தனர்...

ஓட்டுனர் பெர்க்மான்ஸ் கூறுவதுபோல பேருந்தில் பழுதோ, கோளாறுகளோ இல்லை என அதிகாரிகள் கூறிய நிலையில், ஓட்டுநர் பெர்க்மான்ஸை ராணித் தோட்டம் பணிமனை நிர்வாகம் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டது...

இந்த சம்பவம் போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதே போன்று ஏற்கெனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது ஓட்டுநர் பெர்க்மான்ஸ் வேறோரு பேருந்து குறித்து குற்றம் சுமத்தி இருந்தது தெரியவந்துள்ளது...

இதேபோன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பும் வடசேரி பேருந்து நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான அரசு பேருந்துகளின் நிலை குறித்தும் பெர்க்மான்ஸ் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்க நிலையில், இந்த பணியிடை நீக்க நடவடிக்கை போக்குவரத்து ஊழியர்களுக்கும், தினந்தோறும் அரசு போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களுக்கும் ஒரு வித அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்