பலிக்கும் தென்சென்னை மக்களின் கனவு.. விரைவில் சீறி பாய போகும் பறக்கும் ரயில்.. டிராபிக் தொல்லை... இனி இல்லை
தென் சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை வரும் ஜூலைக்குள் முடிக்க ரயில்வேத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக பறக்கும் ரயில் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு முதற்கட்ட பறக்கும் ரயில் திட்ட பணிகள் கடந்த 1997-ல் நிறைவடைந்தது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்ட பணிகள் 2007-ல் முடிக்கப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 3-வது கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்ட பணிகள் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் தூரத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்னைஏற்பட்டது.
2013ல் நிறைவடைய இருந்த இத்திட்ட பணிகள் வழக்குகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கின. இந்நிலையில் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பின் இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டு இறுதி கட்ட இணைப்பு பணிகள் வேகமெடுத்தன. 495 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு பல ஆண்டு காலதாமதத்தால் 730 கோடி ரூபாயாக
அதிகரித்தது. இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்ட தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 500 மீட்டர் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணிகளும் முடிந்து விட்டன. ரயில் நிலைய பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அனைத்து பணிகளும் வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று விரைவில் ரயில் சேவையை துவக்க ரயில்வே அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் தென் சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை விரைவில் தொங்கப்பட உள்ளது.