அமைச்சர் பொன்முடிக்கு செக் வைத்த நீதிமன்றம்
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 4 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில், விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, உள்ளிட்ட 7 பேர் மீது, மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுதம சிகாமணி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 19-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
வழக்கில் தொடர்புடைய சதானந்தம், கோபிநாத், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் மட்டுமே ஆஜரானார்கள். அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 4 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.