மேயருக்கு எதிராக கொந்தளித்த கவுன்சிலர்கள் - கூட்ட அரங்கினுள் திடீர் ஆர்ப்பாட்டம்... - மதுரையில் பரபரப்பு
மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது தொடர்பான விவாத கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக கூட்ட அரங்கினுள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாமன்ற குழு தலைவராக 58வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. குழு தலைவருக்கு தனி அறை ஒதுக்குதல், மாமன்ற கூட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கான அறை ஒதுக்குதல், மற்ற மாநகராட்சிகளில் உள்ள குழு தலைவர்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் இங்கும் அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து கடந்த ஜனவரி 23 அன்று பதிலளித்த மேயர் இந்திராணி, கட்சி வழங்கிய சிறப்பு நிலை பொறுப்பு குறித்த சான்றிதழை சமிர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், முரசொலியில் இந்நியமனம் குறித்து வெளியான அறிவிப்பை அதற்கு பதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.