+2 தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் எடுத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவிக்கு உதவிய கலெக்டர்
மதுரை திருப்பரங்குன்றத்தில், 12-ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் எடுத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் உதவிய செயல், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது
திருப்பரங்குன்றம் சாமநத்தம் பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான வேல்முருகன் என்பவரின் மகள் நந்தினி, அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பில் 600-க்கு 546 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் சேர விண்ணப்பித்தபோது நந்தினிக்கு அம்மை நோய் ஏற்பட்டதால் தாமதமாக விண்ணப்பிக்க நேர்ந்தது. மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சேர, நந்தினியின் உறவினர் இணையதளத்தில் விண்ணப்பித்தபோது கட்டணம் சரியாக செலுத்தப்படாததால் ஏற்கப்படாமல் இருந்துள்ளது. தனியார் கல்லூரியில் சேர பணம் இல்லாத நிலையில், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நந்தினியின் தாயார் மனு அளித்தார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் நந்தினிக்கு மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிகாம் பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.