"இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏறுமே"..தென்னிந்திய சினிமாவின் சிம்டான்காரன்..விஜய் என்னும் மூன்றெழுத்து மந்திரம்

x

ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகனாக வலம் வந்து அரசியலுக்குள் நுழையும் அளவிற்கு செல்வாக்கை பெற்றுள்ள விஜய்யின் 49 வருட வாழ்க்கை பக்கத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

என் நெஞ்சில் குடியிருக்கும் என உரையை தொடங்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை 10 வயதிலேயே தொடங்கி விட்டார். உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் அவரது மனைவி ஷோபாவிற்கும் 1974ம் ஆண்டு செல்லமகனாய் பிறந்த விஜய், தந்தை இயக்குநரானதும் குழந்தை நட்சத்திரமாக வெற்றி திரைப்படத்தில் அறிமுகமானார். அடுத்தடுத்து தந்தையின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் 1992ம் ஆண்டு தாய் ஷோபாவின் திரைக்கதையான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார்.

முதல் படத்தில் பெரிதும் வரவேற்பை பெறவில்லை ஆனால், ரஜினி ரசிகராக காட்டிக்கொண்ட விஜய் 'ரசிகன்' படத்தில் இளையத்தளபதி என்ற பட்டத்தை பெற்றார். பட்டத்தை பெற்றாலும் அடுத்தடுத்து அவர் நடித்த தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறவில்லை.

வெற்றிப்படத்திற்கு காத்திருந்த விஜய்க்கு வரப்பிரசாதமாக அமைந்தது பூவே உனக்காக திரைப்படம். 1996ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் மூலம் மக்களை கவர்ந்தார்.

இதற்கு பின் மாண்புமிகு மாணவன் படம் மூலம் அரசியல்வாதிகளை சுட்டு பொசுக்கி அதிரடி காட்டினாலும் காதல் நாயகனாகவே மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதிலும் 1997ம் ஆண்டு லவ் டுடே, காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை படம் மூலம் காதல் படங்களுக்கே புது அடையாளம் கொடுத்தார். அதே போல் தான் துள்ளாத மனமும் துள்ளும் 200 நாட்களை தாண்டி வசூலை அள்ளியது.

2000ல் சார்மிங் ஹீரோவாக தனது கேஷுவல் ஆக்டிங்கில் குஷி படத்தில் கலக்க பெண் ரசிகைகள் பட்டாளம் தொடங்கியது. இதன் பின் பிரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், ஷாஜகான், வசீகரா புதிய கீதை போன்ற படங்கள் விஜய் கெரியரை காலி செய்து விடுமோ என கேள்வியை எழுப்ப...சாக்லேட் பாயாக இருந்த நடிகர் விஜய் ரக்கட் ஹீரோவாக திருமலை படத்தில் உருவெடுத்தார். அனல் பறக்கும் வசனங்களும், விஜய்யின் இயல்பான நடிப்பும் மீண்டும் விஜய்யை தூக்கி பிடித்தது.

காதல், ஆக்சன், காமெடி என அனைத்து கலவையையும் கலந்த கில்லி படம் அடுத்தடுத்த வெற்றி படங்களுக்கு விதையிட்டது. விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளம், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் திணறும் ரசிகர்கள் என விஜய்யை தூக்கி பிடித்தது

கில்லி அளவிற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது தான் போக்கிரி. அனைத்து ஹீரோக்களுக்கு என்ட்ரி சாங் இருந்தாலும்..விஜய்யின் என்ட்ரி சாங் திரையரங்கை அதிர வைக்கும். அப்படி இன்றளவும் விஜய் ரசிகர்களை அதிர வைப்பது போக்கிரியில் விஜய் என்ட்ரி சாங் தான். இதற்கு பின் விஜய் என்ட்ரி சாங்கிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ், ஆர்மி என இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் பேசிய விஜய் தற்போது வரை துப்பாக்கி இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்து காத்து கிடக்கும் அளவிற்கு நடிப்பில் தெறிக்க விட்டிருந்தார்.

இதன் பின் விஜய் நடிப்பில் வெளி வந்த அனைத்து படங்களும் அவர் அரசியல் பிரவேசத்திற்கு பிள்ளையார் சுழியாகவே பார்க்கப்பட்டது . கத்தி, தெறி, மெர்சல், சர்கார் படங்களில் அரசியல் வசனங்களில் புகுந்து விளையாடிய விஜய் இசைவெளியீட்டு விழா மேடைகளில் சூசகமாக அரசியல் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார்.

வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய், தற்போது அரசியல் களத்தை ஒரு கை பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சத்தமே இல்லாமல் சைலென்டாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் தலைவர்கள் படத்திற்கு மாலை அணிவிப்பது, விலையில்லா விருந்தகம் என மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த அவர் அண்மையில் 234 தொகுதிகளை குறி வைத்தார். அனைத்து தொகுதிகளிலும் உள்ள எதிர்கால வாக்காளர்களை விருது வழங்கி கவர்ந்துள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் அரசியலுக்கு வந்தாள் அரசியல் களம் சூடுபிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்