மாணவியை கொன்ற சாதி சான்றிதழ்... கல்லூரி சேரும் முன்னே கலைந்த கனவு - நெஞ்சை நொறுக்கும் அவலம்
சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவி, மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
சாதிச் சான்றிதழ்... சாதியை காரணம் காட்டி பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் அனுமதி மறுக்கப்பட்ட கடை நிலை மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு கல்வி நிலையங்களில் கேட்கப்படக்கூடிய சான்றிதழ்...
இவ்வாறு கடைநிலை மக்களின் குழந்தைகள், அடக்குமுறைக்கு ஆளாக்கி புறக்கணிக்கப்பட்ட போது, அவர்களை பள்ளிக்கூடம் அழைத்து வந்து வாழ்க்கை கொடுத்த சாதிச் சான்றிதழே... மாணவி ஒருவரின் உயிரையும் பறித்திருக்கிறதென்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சரோஜா. இவரது மகளான ராஜேஸ்வரி, நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்த நிலையில், கலைக்கல்லூரியில் படிக்க ஆர்வம் கொண்டு சில கல்லூரிகளின் விண்ணப்பம் பெற்று பதிவு செய்திருக்கிறார்.
மாணவியிடம் சாதிச் சான்றிதழ் இல்லாத நிலையில், தனது பள்ளிப்படிப்பை சாதிச் சான்றிதழ் இல்லாமலே நிறைவு செய்த மாணவியிடம், அனைத்து கல்லூரிகளும் சாதி சான்றிதழ் கட்டாயம் தேவை என கேட்டதாக கூறப்படுகிறது...
ஏற்கெனவே, சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்படும் நிலையில், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் மாணவியால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை...
இதனால், மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது... மாணவியின் செயலை கண்டு திடுக்கிட்டு போன குடும்பத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், உயிரிழந்த மாணவியின் குடும்பம் அப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், அவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது...
30 குடும்பங்களில் 80 க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், அங்குள்ள குழந்தைகள் யாருக்குமே சாதிச் சான்றிதழ் இல்லையெனவும், இதனால் பலர் பள்ளிக்கூடமே செல்வதில்லை எனக்கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
ஆரம்பத்தில் சாதிச்சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது குழந்தைகளை எல்கேஜியில் சேர்க்க வேண்டுமென்றாலே சாதிச் சான்றிதழ் கட்டாயம் கேட்பதாக பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்..
பல முறை சாதிச் சான்றிதழ் கேட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும், தாசில்தாரிடமும் மனுகொடுத்தும் தொடர்ந்து தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அலட்சியப்படுத்தப்படுவதாகவும் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கும் நிலையில், இதை அரசாங்கம் கருத்தில் கொண்டு விரைவில் ஓர் தீர்வு காண வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது....