மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கு... தாயாருக்கு நீதிபதி போட்ட உத்தரவு
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் ஸ்ரீமதி, சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்2 படித்து வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் தாயார் செல்வி அளித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, 1,362 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கில் இருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா விடுவிக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல், ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரத்தை வழங்குமாறும் செல்வி மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் வருகிற 21-ந் தேதி ஆஜராகி தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.