"லஞ்சம் வாங்குவதில் காட்டும் அக்கறையை சம்பளம் வாங்குவதிலும் காட்ட வேண்டும்"
லஞ்சம் வாங்குவதில் காட்டும் அக்கறையை சம்பளம் வாங்குவதிலும் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் காட்டமாக கூறினர்.
ராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரம் சிலோன் காலணியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுப் பாதையை மீட்க உத்தரவிடக் கோரி தங்கபாண்டி என்பவர் கடந்த ஆண்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பாதையை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, 8 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. பல மாதங்களாகியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி தாசில்தார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, தங்கபாண்டி அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களின் சிரமங்களை போக்க உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். லஞ்சம் வாங்குவதில் காட்டும் அக்கறையை சம்பளம் வாங்குவதிலும் அதிகாரிகள் காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கடுமையாக கூறினார்கள்.