லிவ் இன் காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாத்த காதலன்
லிவ் இன் உறவில் இருந்த காதலி, தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய ஆத்திரத்தில் அவரை 35 துண்டுளாக வெட்டிக் கொன்ற காதலனின் செயல் டெல்லியையே உறைய வைத்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த 26 வயதான ஷ்ரத்தா என்ற இளம்பெண் கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அப்தாப் பூனாவல்லா என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்கள் டெல்லிக்கு வந்து மெஹ்ராலியில் உள்ள குடியிருப்பில் லிவ் இன் உறவில் இருந்து வந்தனர். இதனிடையே தன் மகளை காணவில்லை என அவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திய போது தான் இதன் பின்னணியில் நடந்த கொடூரம் வெளியே வந்தது. அப்தாப் பூனாவல்லாவுடன் வசித்து வந்த ஷ்ரத்தா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கூறவே, பிரச்சினை வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த அப்தாப், கடந்த மே மாதம் 18ஆம் தேதி ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். காதலியை 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சுற்றிய அப்தாப், 18 இடங்களில் அவரின் உடல் பாகங்களை வீசிச் சென்றதும் தெரியவந்தது. கொடூர கொலை செய்த காதலனை கைது செய்த போலீசார், ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.