இளைஞர் உயிரை பறித்த கொதிக்கும் ரசம்.. திருமணத்தில் கேட்டரிங் பார்த்தபோது பயங்கரம் - தாய் சொன்ன பகீர் தகவல்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், திருமண மண்டபத்தில் உணவு பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர், கொதிக்கும் ரசம் அண்டாவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவின் சுவைக்கு உயிரூட்டும் ரசம், இளைஞனின் உயிரை எடுத்துள்ள சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...
அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்த 20 வயதான சதீஷ் என்ற இளைஞர், தனியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து, பகுதி நேரமாக உணவு பரிமாறும் கேட்டரிங் வேலைக்கு சதீஷ் சென்று வந்துள்ளார் . குடும்ப சூழ்நிலை காரணமாக, அவ்வப்போது வரும் கேட்டரிங் பணியில் இருந்து வரும் வருமானத்தை வைத்து, தனது பாக்கெட் மணியை பூர்த்தி செய்துள்ளார் சதீஷ்...
வழக்கம்போல, கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு சென்று வந்த சதீஷ், நண்பர்கள் அழைப்பின் பேரில், மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உணவு பரிமாறச் சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு வயிராற பரிமாற நினைத்த சதீஷூக்கு, வாழக்கையை தலைகீழாக மாற்றியது அந்த ஒரு விநாடி...
உணவு பரிமாறும் அறையில், விருந்தினர்கள் ரசத்தைக் கேட்க, தூக்கு தொட்டியுடன் சமையல் அறைக்கு ஓடோடி வந்த சதீஷூ, நிலைதடுமாறி, ரசத்துடன் கொதித்துக் கொண்டிருந்த அண்டாவில் விழுந்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு, அதிர்ச்சியில் ஓடி வந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டபோது, வயிறு, தொடை மற்றும் கால் பகுதிகள் முற்றிலும் காயமடைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷை, நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷூக்கு, 6 நாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எப்படியாவது மகனை காப்பாற்றி விடுவார்கள் என நம்பி, 6 நாட்கள் மருத்துவமனை வாயிலில் தவமாய் தவமிருந்த பெற்றோரும், உறவினர்களும், சதீஷின் இறப்பு செய்தியால் துடிதுடித்துப் போயினர்.