சர்வதேச கும்பலுக்கு சிறுமிகளின் ஆபாச படம் சப்ளை - ஆராய்ச்சி மாணவர் செய்த அதிர்ச்சி சம்பவம்.. தஞ்சையில் பயங்கரம்
- தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு என்ற சிறு கிராமம் கடந்த 15ஆம் தேதி அதிகாலை பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. காரணம் அந்த கிராமத்தை சேர்ந்த 35 வயதான ஆராய்ச்சி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா என்ற மாணவர் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்ததே அத்தனை பரபரப்புக்கும் காரணம்...
- சுற்றுச்சூழல் குறித்து பி.எச்.டி படித்து வந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை டெல்லியில் இருந்து வந்த சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான குழு சுற்றி வளைத்தது. பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக வந்த தகவலின் பேரில் அவரை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
- பின்னர் அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தங்கள் மகன் மீது எந்த தவறும் இல்லை என்றும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது ஏன்? என்றும் அவரின் பெற்றோர் கேள்வி எழுப்பினர்...
- இதனிடையே திடீரென அந்த இளைஞர், சிறுமிகளின் ஆபாச படங்களை சர்வதேச கும்பலுடன் பகிர்ந்ததாக தகவல் பரவவே, பரபரப்பு தொற்றிக் கொண்டது.
- குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
- இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த இன்டர்போல் சர்வதேச மாநாட்டிலும் குழந்தைகள் ஆபாச படத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சர்வதேச பிரச்சினையாக கருதப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
- இதன்படி சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள், தங்கள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருப்போர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியாக நடந்த சோதனையில் சிக்கியிருக்கிறார் இந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா..
- இன்டர்போல் அதிகாரிகள் உதவியோடு இந்த தகவலை அறிந்த சிபிஐ அதிகாரிகள் தஞ்சையை சேர்ந்த இந்த இளைஞரை சுற்றி வளைத்தனர். தொடர் விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்திருக்கும் நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை அவர் வைத்திருந்ததும் தெரியவந்தது.
- மேலும் விக்டர் ஜேம்ஸ் ராஜா வீடியோ எடுக்க பயன்படுத்திய கேமராக்கள், கணினிகள், லேப்டாப் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு குழந்தைகளின் ஆபாச படங்கள் தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையால் தஞ்சையே பரபரப்பாகி இருக்கிறது...
Next Story