"நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளா வருவேன், அப்பவும் நீங்க" முதல்வருக்கு கடிதம் எழுதிய 3ம் வகுப்பு சிறுமி
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தென்காசியை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவி நன்றி கடிதம் அனுப்பி உள்ளார். தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார் பட்டியை சேர்ந்த மாணவி ஆராதனா. தமது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரக் கோரி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிருந்தார். தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, இதனை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான நிதியையும் உடனே ஒதுக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், மாணவி ஆராதனா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தாங்கள் கூறியது போல், இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாக வருவேன் என்றும், அப்போதும் முதலமைச்சராக தாங்களே இருக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையாக இருப்பதாகவும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.