உரிக்காமலேயே கண்ணீர் வரும் போலயே!...சதம் அடித்த சின்ன வெங்காயத்தின் விலை! - திண்டாடும் பொதுமக்கள்

x

தக்காளி விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், கண்ணீர் விடும் அளவிற்கு சின்ன வெங்காயத்தின் விலையும் எகிறியுள்ளது. மக்களை திண்டாட வைக்கும் காய்கறி விலையேற்றத்தை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

தக்காளியின் விலை சதமடித்து பொதுமக்களை மிரட்டி வந்த நிலையில், அந்த லிஸ்டில் முந்திக்கொண்டு முதல் இடம் பிடித்துள்ளது சின்ன வெங்காயம்.

கடந்த ஒரு வருடமாக சின்ன வெங்காயம் வரத்து அதிகரித் திருந்ததால், அதன் விலை கடுமையாக சரிவடைந்தது.

ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கீழ் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து விளைவித்த வெங்காயம் விலை போகாமல் விரக்தியடைந்தனர் விவசாயிகள்.

தற்போது அந்த நிலை தலைகீழாக மாறி, வரத்து வெகுவாக குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லாபம் தராத சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிடாததால், ஆந்திரா, கர்நாடாகாவில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

தற்போது அங்கும் மழை காரணமாக சின்ன வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என அனைத்திற்கும் சாம்பார் தான் முதல் பிராயாரிட்டி. சாம்பார் பிரியர்களும் அதிகம் இருப்பதால் சின்ன வெங்காயத்தின் விலையேற்றம் மக்களுக்கு பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது.

முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என தரம் பிரித்து விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம், 100 முதல் 150

ரூபாய் வரை விற்பனையாகிறது.

தக்காளி விலையேற்றத்தால் திக்குமுக்காடி திணறி வந்த மக்களை கண்ணீர் விட வைக்கிறது சின்ன வெங்காயத்தின் விலையேற்றம்.

சின்ன வெங்காயத்தின் விலையை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்க, நைசாக பீன்ஸ், இஞ்சி போன்ற காய்கறி களின் விலையும் எகிறியுள்ளது. நாளுக்கு நாள் விலையேறி வந்த பீன்ஸ் இன்று 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராக்கெட் வேகத்தில் விலையேற்றத்தை கண்டு வரும் இஞ்சி, ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழக சமையலறைகளில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துவரும் தக்காளி, சாம்பார் வெங்காயம், இஞ்சி என அத்தியாவசிய காயகறிகளின் விலையேற்றம் இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்த,அரசே காய்கறிகளை அதிகளவில் கொள்முதல் செய்து பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யவேண்டும் என்றும்,

அதேபோல், காய்கறிகளை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர் பொதுமக்கள்.

எகிறும் சின்ன வெங்காயம் விலை !

1ம் தரம் - 3ம் தரம் = ரூ. 100 - ரூ. 150

விலையேறிய காய்கறிகள்

பீன்ஸ் = ரூ. 100

இஞ்சி = ரூ.300


Next Story

மேலும் செய்திகள்