"காலை சிற்றுண்டி திட்டத்தில் ஆசிரியர்கள்.." - தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேதனை
காலை சிற்றுண்டி உணவு திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நடைபெற்று வரும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் இந்த போராட்டத்தில்,தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ரங்கராஜன்,
காலை சிற்றுண்டி உணவு திட்டத்தில் ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறினார். இதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறிய அவர்,இந்த திட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்