"காலையில் டாஸ்மாக் திறப்பு?“ - "விரைவில் 90 மில்லி டெட்ரா பேக்“ - டாஸ்மாக்கின் புதிய வியூகம்
டாஸ்மாக் கடைகளை காலையிலே திறப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 500 மதுபானக்கடைகள் மூடப்பட்டது வரவேற்பை பெற்ற நிலையில், டாஸ்மாக் மேலாளர்கள் உடனான அமைச்சர் முத்துசாமி கூட்டம் முக்கியம் பெற்றது.
கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலையிலே டாஸ்மாக் கடைகளை திறக்க கோரிக்கை இருப்பதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
டெட்ரா பேக்கில் மதுபானம் வழங்கும் விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலவுகிறது. இதுபோல் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை என்பது மதுவுக்கு அடிமையாவோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும், சிறார்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற எதிர்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் காலையிலே டாஸ்மாக்கை திறப்பது குறித்து ஆய்வு செய்யப்படும், டெட்ரா பேக்கில் மது விற்பதில் விரைந்து நடவடிக்கை என அமைச்சர் முத்துசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
காலையிலே டாஸ்மாக் திறப்பது என்பது, மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்கு சமம் எனக் கூறியிருக்கும் டிடிவி தினகரன், பள்ளி கல்லூரிக்கு மாணவர்கள் செல்லும் வேளையில் டாஸ்மாக் திறக்கப்பட்டால் அமமுக அதற்கு எதிராக போராடும் என அறிவித்துள்ளார்.
அதேநேரம் பாமக தரப்பில் அன்புமணி ராமதாசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
டெட்ராவில் 90 மில்லி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்...