மருத்துவமனை வரும் மூதாட்டிகளுக்கு குறி... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் முதியவர்களை குறிவைத்து, நூதன கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்ததை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் மூதாட்டிகளை குறிவைத்து, மர்மநபர் நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடிப்பதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், முதியவர்களிடம் அறிமுகமாகும் அந்த நபர், தான் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருவதாகவும், அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியவர்களுக்கு ஒரு சவரன் நகை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, விண்ணப்ப படிவத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் நகை அணிந்திருந்தால் முதியோர் உதவி தொகை தர மாட்டார்கள் எனக் கூறி, நகைகளை பர்சில் வைக்குமாறும், தான் கூறும் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை கொடுத்தால் பணம் மற்றும் தங்க நகை கிடைக்கும் என்றும் முதியவர்களிடம் ஏமாற்றும் நோக்கில் அந்த நபர் பாவனை காட்டியுள்ளார்.

இதனை நம்பிய மூதாட்டிகள் அலுவலகத்திற்கு செல்லும்போது, அந்த நபர் நகைகளை சுருட்டிக்கொண்டு தப்பிச்செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் 3 மூதாட்டிகளிடம் இருந்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக புகார்கள் வந்துள்ளன.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சித்ரவேல் என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மதுரை எழில் நகரில் வீட்டில் பதுங்கி இருந்த மாற்றுத் திறனாளியான சித்ரவேலை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவயதிலேயே குற்றச்செயலில் ஈடுபட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்ற சித்ரவேலுக்கு பின்னர் திருமணமாகி நிலையில், 2 பெண் பிள்ளைகள் பிறந்துள்ளன.

குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால் மாற்றுத் திறனாளியான சித்ரவேல் மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். மாற்றுத் திறனாளி என்பதால், வீடு புகுந்து கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட முடியாது என்பதால், இந்த நூதன வித்தையை பயன்படுத்தி மூதாட்டிகளை ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரிந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை இரு மகளின் திருமணத்திற்காகவும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும், சித்ரவேல் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் உறுதியானது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட சித்திரவேலிடம் இருந்து 27 கிராம் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்