கடும் குளிருடன் கொட்டி தீர்த்த கனமழை
- தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தூத்துக்குடி பகுதிகளில் இரவில் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மிதமான மழையினால் ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.
- திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல கூடிய பிரதான சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது.
- தென்காசி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. அங்குள்ள வாசுதேவநல்லூர், சிவகிரி, தலைவன்கோட்டை, மலையடிகுறிச்சி, தாருகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த மழையால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால், மலைபாதையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்களும் அவதி அடைந்துள்ளனர்.
Next Story