"தமிழ் ஒரு மொழி என்பதை விட மேலானது" - அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேச்சு
தமிழ் மொழிக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்பட ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலிபோர்னியாவில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, நமது அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு கலாச்சாரம் மொழிகள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் இந்த சித்தாந்தத்தையும் அரசியல் சாசனத்தையும் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருப்பதாக குற்றம் சாட்டினார். தமிழ் மக்களை பொருத்தவரை தமிழ் மொழி என்பது ஒரு மொழியை தாண்டி மேலானது என்பதை தனிப்பட்ட முறையில் உணர்ந்து இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.
தமிழ் மொழி என்பது தமிழ் மக்களின் வரலாறு, கலாச்சார மற்றும் வாழும் விதம் என தெரிவித்தார்.
தமிழ் மொழியை அச்சுறுத்துவது என்பது இந்தியாவின் சித்தாந்தத்தை அச்சுறுத்துவதற்கு சமம் என தெரிவித்த ராகுல் காந்தி தமிழ் மொழியை அச்சுறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தார்.