சந்தேகத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு... மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்
திருமணமாகி 2 மாசத்துல நாலு மாச கருவ வயித்துல சுமந்திருக்காங்க ஒரு புது பெண்.... எல்லாருக்கும் இயல்பா வர்ற சந்தேகம் அந்த பெண்ணோட கணவனுக்கும் வந்திருக்கு. ஆனா அந்த சந்தேகம் கடைசியில ஒரு உயிர காவு வாங்கியிருக்கு. 4 மாத குழந்தை வயிற்றில் இருக்க, தன் பிள்ளையை பறிகொடுத்தவர்களின் ஓலமும் அழுகுரலும் இந்த கிராமத்து மக்களை ஒன்று திரட்டி இருக்கிறது. ஊரே பதைபதைக்கும் நெஞ்சோடு, திரளாக கூடி இருக்க காரணம் ஒரு கொடூர கொலை. கொல்லப்பட்டவர் ரோஜா. சிதம்பரத்தில் உள்ள கீழ்-அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் சிலம்பரசன்.
30 வயதான சிலம்பரசன் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்திருக்கிறார். சிலம்பரசன் ரோஜா தம்பதிக்கு கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு தடபுடலாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணம் நடந்து 2 மாதங்களே ஆன நிலையில் தான், ரோஜா கழுத்தறுப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் பெரிதாக புலன் விசாரணை எதுவும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. காரணம் ரோஜாவை கொன்றது அவரது கணவர் சிலம்பரசன். உடனே போலீசார் தலைமறைவாக இருந்த சிலம்பரசனை கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். அதில் கொலைக்கு காரணமாக இருந்தது சந்தேகம் என்னும் சாத்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பட்ட படிப்பை முடித்திருந்த ரோஜாவுக்கு கூலி வேலை பார்க்கும் சிலம்பரசனுடன் ஜோடி சேர விருப்பம் இல்லை. திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் கூறியிருக்கிறார் ரோஜா. ஆனால் வீட்டிலிருந்தவர்கள் கட்டாயப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் ரோஜாவின் மனம் மாறவில்லை. ஆனால் சிலம்பரசன் வீட்டில் விடுவதாக இல்லை ஊர் பஞ்சாயத்தை கூட்டி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.எல்லாம் நன்றாக நடந்து மிடிந்துவிட்டது என்று சிலம்பரசனின் குடும்பத்தார் நினைத்திருந்த நேரத்தில் தான் அந்த செய்தி நெஞ்சில் இடியாக வந்து இறங்கி இருக்கிறது.
இது நல்ல விஷயம் தானே இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். திருமணம் நடந்து முடிந்த இரண்டே மாதத்தில் ரோஜா 4 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த விஷயம் சிலம்பரசனுக்கு ரோஜா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியியிருக்கிறது. ரோஜாவும் செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசியதாக சொல்லப்படுகிறது. அதில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்த சிலம்பரசன், ரோஜா செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். சரிக்குசமமாக ரோஜாவும் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.