"மீறினால் கடும் நடவடிக்கை" - மத்திய அரசு எச்சரிக்கை
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் கையிருப்பு நிலைமைகளை சரிபார்த்து, இருப்பு வரம்பு உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
மாநிலங்களில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் இருப்பு நிலை குறித்த ஆய்வு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் நிதி கரே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய கிடங்கு கழகம், மாநில உணவு மற்றும் குடிமை பொருள்கள் வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் கையிருப்பு நிலைமைகளை சரிபார்த்து இருப்பு வரம்பு உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் கையிருப்பு பற்றிய கள நிலவரங்களை அறிவதற்காக 12 மூத்த அதிகாரிகளை நுகர்வோர் நலத்துறை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.