17 நிமிடத்தில் 64 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (26.04.2023)
மூன்று மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தூத்துக்குடியில் அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டிக் கொல்லப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும், தமிழ்நாடு அரசு போற்றுவதாக அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது போன்ற வன்முறை சம்பவங்கள் குறித்து, தொடர்ந்து எச்சரித்தும், தமிழக அரசு பாராமுகமாய் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மையால் நிதி இழப்பு, நிதி மோசடி அதிகமாக இருந்ததாக தெரிவித்தார்.