16 நிமிடத்தில் 30 செய்திகள்... இரவு தந்தி செய்திகள் | Thanthi Night News | Speed News (06.05.2023)
வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் பெண்கள் இளைஞர்கள் குடிக்க ஆரம்பித்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ், 44 ஆண்டு காலமாக மது ஒழிப்பு குறித்து போராட்டம் நடத்தி வருவதாகவும், தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்தார்.
ஆளுநருக்கும் அவரது கருத்துக்களை கூற உரிமை உண்டு என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டு கட்டாக 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கோலார் மாவட்டத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நான்கரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 20 கோடி ரூபாய் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் கொடுப்பதற்காக ஃபைனான்சியர்கள் பதுக்கி வைத்திருந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி பெங்களூரில் 26 கிலோ மீட்டர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தார். கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் 2வது நாள் பிரச்சாரமாக பெங்களூரில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். ஆர்பிஐ மைதானத்தில் இருந்து திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பேரணியை பிரதமர் மோடி துவங்கிய நிலையில், சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் மோடி பயணித்த வாகனத்தின் மீது பூக்கள் தூவப்பட்டன.