27 நிமிடத்தில் 60 செய்திகள்... | காலை தந்தி செய்திகள் | Speed News (03.05.2023)
ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தலங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊடகங்கள் அது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பாமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்து.
என் எல் சி நிறுவனம் சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு பாமக, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள், கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் என் எல் சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போக்குவரத்து காவல்துறை சார்பில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மூலம் 5 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000 - க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 100 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ஐந்து கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 360 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை கண்டித்து டெல்லியில் பஜ்ரங் தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஜ்ரங் தள் அமைப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். கையில் பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பஜ்ரங் தள் அமைப்பிற்கு எதிரான அறிவிப்பை காங்கிரஸ் உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தினர்.