அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு சுற்றுலா.. ஆடி மாதத்தில் அடிச்ச ஆஃபர்.. அமைச்சர் சேகர் பாபுவின் புதிய திட்டம்
ஆடி மாதத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு, அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டம் இருப்பதாக, குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காளபரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்களுக்கு ஒரு பயண திட்டமும், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களுக்கு ஒரு பயண திட்டமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் ஆன்மிக சுற்றுலா செயல்படுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனத்துடன், பிரசாதம், கோயில் விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.