திரும்புகிறதா அதிமுகவின் வரலாறு?.. இது 3ம் டெஸ்ட்.. வெற்றி யாருக்கு - டாஸுக்கு தயாராகும் களம்..!
அதிமுகவில் உட்கட்சி மோதலில் சின்னம் முடக்கப்பட்டு மீள்வது என்பது புதிதல்ல... எம்.ஜி. ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது.
இரு அணிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடிய போது, சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். 1989 சட்டப்பேரவை தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவையும், ஜெயலலிதா அணிக்கு சேவலையும் சின்னமாக கொடுத்தது.
தோல்வியை சந்தித்த ஜானகி அணி, ஜெயலலிதா அணியுடன் இணைய மீண்டும் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைத்தது. இதேபோன்ற சூழல் ஜெயலலிதா மறைவின் போது எழுந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஒபிஎஸ் தலைமையில் ஓரணியும் உருவாகியது.
2017 மார்ச்சில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்வர இரட்டை இலை சின்னம் யாருக்கு என போட்டி ஏற்பட்டது. அப்போதும் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். பின்னர் சசிகலா தரப்பிலிருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் கைகோர்க்க பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு சின்னம் 2017 நவம்பரில் ஒதுக்கப்பட்டது.
இப்போதும் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்திருக்கிறது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக வந்த தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் சென்ற பொதுக்குழு வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதாகவே சமீபத்தில் அதிமுகவுக்கு கடிதம் எழுதியது. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஈபிஎஸ் தரப்பு போட்டியென அறிவித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பும் களம் என மார்தட்டுகிறது. தீர்வு வெளியாகாது இரு அணியும் இரட்டை இலையை கேட்கும் போது, சின்னம் முடங்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் இரட்டை இலையை கோரி வாதிட, கால அவகாசத்தை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இருபிரிவுக்கு சுயேட்சை சின்னங்களாக தொப்பி, இரட்டை மின்கம்பம் சின்னங்களாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது என்ன நடக்கப்போகிறது என்பது அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது.