ஃபியூட்டி குயினான 'சேரி இளவரசி'.. 2.5M பாலோவர்ஸ்.. நடிகைகளுக்கு டஃப் - இந்தியாவின் Brand-ஆன 'தாராவி' சிறுமி

x

ஸ்லம்டாக் மில்லியனர்... முழுக்க முழுக்க மும்பை தாராவியை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்... சேரியில் பிறந்த சிறுவன் "கோடீஸ்வரன்" நிகழ்ச்சியில் பங்கேற்று பொருளாதாரம், காதல் - இரண்டையும் ஜெயிப்பது தான் கதைக்களம்...

ஆனால், உண்மையிலேயே குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்திருக்கிறாள் ஒரு 14 வயது சிறுமி... யார் அவள்?

மலீஷா கர்வா... மும்பை தாராவிதான் பிறப்பிடம்... மும்பை... ஒருபுறம் ஆடம்பரமாய் பணம் புழங்க... மறுபுறம் போட்டுக் கொள்ள துணி கூட இன்றி மக்கள் காட்சியளிப்பது தான் இந்த தாராவி...

நடக்கக் கூட முடியாது... அவ்வளவு குறுகலான வீதிகள்... புறாக்கூட்டை விட குட்டியான வீடுகள்... பொதுக் கழிப்பறைகள்... மூக்கைப் பிடிக்காமல் நகர முடியாத அவலம்... மாடுபோல் உழைத்தும் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் இன்னும் மேடேறவில்லை... இது தான் மலீஷா பிறந்த இடம்... இங்கு தான் அவர் தன் பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்தார்... ஆனால் இன்று அவர் ரேஞ்சே தனி...

2020ல் ஹாலிவுட் நடிகர் Robert Hoffman மும்பை வந்த போதுதான் இந்த முத்தைக் கண்டெடுத்தார்... மலீஷாவின் சுட்டித் தனத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட Hoffman, சிறுமியின் கனவுகளுக்காக GoFundMe கணக்கைத் துவங்கி வைத்தார்... மழைக்காலத்தில் உணவு, தண்ணீர், இருப்பிடம் இல்லாமல் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது இந்தப் பக்கம்... இது தான் முதல் விதை... இன்று இன்ஸ்டாவில் மலீஷாவை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்திற்கும் அதிகம்... அப்போது துவங்கிய இவரது மாடலிங் பயணம் இன்று வரை ஏறுமுகம் தான்...

"சேரியின் இளவரசி"யாக உலகம் முழுதும் அறியப்பட்டார் மலீஷா... The Peacock, Cosmopolitan போன்ற முன்னணி இதழ்களை அலங்கரித்த சூப்பர் மாடல் மலீஷா, Live Your Fairytale என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்... அத்துடன் தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்...

Forest Essentials எனும் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "யுவதியின்" விளம்பர மாடலாக உயர்ந்துள்ளார் மலீஷா...

மலீஷாவின் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல... சேரியில் பிறந்து சூப்பர் மாடலாக உயர்ந்து ஹாலிவுட் வரை சென்றிருக்கும் இவரது பயணம் ஏழ்மையில் வாடும் அனைத்து குழந்தைகளுக்கும் முன்னுதாரணம்...

வறுமையின் முகமாக இருந்த மலீஷா... இன்று ஆடம்பர அழகு சாதன பிராண்டின் விளம்பர மாடலாக உயர்ந்து அசத்தியுள்ளார்...

இது வெறும் ஆரம்பம் தான்... குடிசை உயர்ந்து கோபுரமாய் நிற்கிறது... தன் கனவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த மலீஷா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப் படிக்கட்டாய் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும்...


Next Story

மேலும் செய்திகள்