ஒற்றை குடும்ப ஆட்சி... ஒருவேளை உணவுக்கு வழியில்லை... கொத்துக்கொத்தாக மடியும் உயிர்கள்..! என்ன நடக்கிறது வட கொரியாவில்..?
வடகொரியாவில் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சத்தினால் பட்டினி சாவுகள் அதிகரித்துள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
ஒன்றுப்பட்ட கொரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போர் 1953ல் முடிந்த பின், வட மற்றும் தென் கொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.
கம்யூனிச பாதையில் சென்ற வட கொரியா கடந்த 70 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி யில் சிக்கி பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகிறது.
முதலாளித்துவ ஜனனாயகப் பாதையில் சென்ற தென் கொரியா, அமெரிக்காவின் உதவியுடன் வளர்ந்த நாடாக உருவெடுத்தது. தென் கொரியாவை கைபற்றி, தன்னுடன் இணைத்து கொள்ளப் போவதாக வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இதை தடுக்க, சுமார் 28,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இரு நாடுகள் இடையே உள்ள எல்லை கோட்டுப்பகுதியில், 4 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பகுதி உருவாக்கப் பட்டுள்ளது.
வட மற்றும் தென் கொரிய எல்லை 70 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நிலையில், வட கொரியாவுடன் மிக நீண்ட எல்லையை பகிர்ந்துள்ள நாடு சீனா தான்.
இந்நிலையில், வட கொரியாவில் உணவு பஞ்சம் காரணமாக பட்டினி சாவுகள் அதிகரித்துள்ளதாக, பி.பி.சி நிறுவனம் கூறியுள்ளது.
வட கொரியாவின் 2.6 கோடி மக்கள்தொகைக்கு தேவையான உணவு தானியங்கள் அங்கு உற்பத்தி ஆவதில்லை. பற்றாகுறையை சமாளிக்க பல ஆண்டுகளாக சீனாவிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்து வருகிறது வடகொரியா.
2020ல் கொரோனா தொற்றுதல் தொடங்கியவுடன், சீனாவுடனான எல்லையை வட கொரியா மூடியாது.
இரு நாடுகள் இடையே இருந்த வர்த்தக உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
இதனால் கடந்த 3 வருடங்களாக சீனாவில் இருந்து உணவு பொருட்கள், உரங்கள் இறக்குமதி நின்று போய், வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு வெகுவாக அதிகரித் துள்ளது.
தலைநகர் பயோங்கியாங்கில் மூன்று பேர் அடங்கிய குடும்பத்தினர் உணவு இல்லாமல், பட்டினியால் இறந்ததாக, பிபிசி கூறியுள்ளது
சீனாவில் இருந்து தானியங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்படும் வரை, வட கொரியாவில் உணவு பஞ்சம் தொடரும் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.