கேட்டது 'கோலார்'.. கொடுத்தது 'வருணா'.. தந்தைக்காக விட்டு கொடுக்கும் மகன் - சித்தராமையாவிற்கு ட்விஸ்ட் தந்த காங்.
- உட்கட்சி பூசலால் சின்னாபின்னமாகிய காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சில மாதங்களுக்கு முன்பு வரை கர்நாடகாவிலும் அதே நிலை தான் நீடித்தது.
- எதிர்கட்சி தலைவரான சித்தராமையாவும்... கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் எதிரும் புதிருமாக பயணித்தது பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியாக ராகுலின் யாத்திரையில் இருவரையும் ஒன்றிணைத்து வைத்து... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது, காங்கிரஸ்.
- இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, காங்கிரஸ்.
- இதில் கனகபுரா தொகுதியில் டி.கே.சிவகுமார் மீண்டும் போட்டியிடும் நிலையில், சித்தராமையாவிற்கு அவரின் மகனுடைய தொகுதியான வருணாவை ஒதுக்கியது, கட்சி மேலிடம்.
- கடந்த 2018ஆம் ஆண்டு இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றதன் மூலம் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்திருந்தார்.
- இந்த தொகுதியை தனது மகனுக்காக சென்ற முறை விட்டு கொடுத்திருந்த சித்தராமையா, மைசூர் மாவட்டம் சாமுண்டேஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில், பாதாமி தொகுதியில் குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார்.
- இந்நிலையில், இம்முறையும் இரண்டு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம்... தேர்தல் நெருங்குவதற்கு முன்பே தான் கோலார் தொகுதியில் போட்டியிட இருப்பதாக பகீரங்கமாக அறிவித்து, அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார், சித்தராமையா.
- ஆனால் கோலார் தொகுதியில் சித்தராமையாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்பதால் அவருக்கு வருணா தொகுதியை கட்சி மேலிடம் ஒதுக்கியிருப்பதாக தெரிகிறது.
- ஒருவேளை கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் சித்தராமையாவிற்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அவரின் வெற்றி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
- இதனால் தந்தை சித்தராமையாவிற்கு தனது தொகுதியை மகன் யதீந்திரா விட்டு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே வேளையில், வருணாவுடன் சேர்த்து கோலார் தொகுதியிலும் நிற்க கட்சி மேலிடத்தில் சித்தராமையாக தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன.
- அதே வேளையில், சித்தராமையா எந்த தொகுதியில் நின்றாலும் அவரை தோற்கடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி வரும் பாஜக... சித்தராமையாவிற்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறியிருப்பது... கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சித்தராமையாவின் வெற்றி அவ்வளவு எளிதாக இருந்துவிட முடியாது என்பதை காட்டுகிறது.
Next Story