தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - எடப்பாடியில் அதே போல் அடுத்த மரணம்..!
தமிழகத்தில் பதிவாகும் மதுபானம் தொடர்பான மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி குடித்தவர்கள்
மதுவில் சயனைடு கலப்பு - போலீஸ் தீவிர விசாரணை
தஞ்சையில் மே 21 ஆம் தேதி மதுபானம் அருந்திய இருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழவாசலில் குப்புசாமி என்ற முதியவரும், விவேக் என்ற இளைஞரும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே அங்கிருந்த மதுபான பாரில் மதுபானம் வாங்கி குடித்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்த போது, உடற்கூறு ஆய்வில் மதுபானத்தில் சயனைடு கலந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீசார் விசாரித்து வரும் சூழலில் சயனைடு கலந்தது யார்...? சயனைடு கிடைத்தது எப்படி என்பது புரியாத புதிராகவே தொடர்கிறது.
மதுவில் சயனைடு கலப்பு- விசாரணையில் அதிர்ச்சி
சொத்து பிரச்சினையில் சயனைடு கலந்த பங்காளி கைது
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 12 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியில் மதுபானம் குடித்த இருவர் உயிரிழந்தனர். அங்கு இரும்பு பட்டறை நடத்திவந்த பழனி குருநாதனும், அவரது பட்டறையில் வேலை செய்த பூராசாமி என்பவரும் உயிரிழந்தனர். அவர்களிடம் நடத்திய உடற்கூறாய்வு பரிசோதனையிலும் மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய சூழலில், பூர்விக சொத்து பிரச்சினையில் பழனி குருநாதனை தீர்த்துக்கட்ட அவரது பங்காளி பாஸ்கரனே சய்னைடு கலந்தது தெரியவந்தது.
சிறுகனூர், திருச்சி
"எதுவும் சாப்பிடாமல் மது குடித்ததால் இருவர் உயிரிழப்பு"
இந்த சூழலில் மதுபானம் காரணமாக திருச்சியில் இருவர் உயிரிழந்த செய்தி கேட்போரை தூக்கிவாரி போட செய்தது. சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்த சிவக்குமார் என்பவரும் முனியாண்டி என்பவரும் உயிரிழந்தனர். போலி மதுபானமே அவர்களது இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தீவிர மதுபிரியர்களான இருவரும் வயிற்றுக்கு ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் குடித்ததால் இறந்திருக்கிறார்கள் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
நேற்று சேலம் மாவட்டத்தில் மதுபானம் குடித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். எடப்பாடியை அடுத்துள்ள கள்ளுகடையில் செயல்படும் மதுபான பாரில் மது அருந்திய சேகர் என்ற இளைஞர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் மது அருந்தியதால் உயிரிழந்தாரா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை தொடங்கியது. மதுபான பாரில் மது அருந்திய கூலி தொழிலாளி சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.