வேலை செய்யும் பெண்களுக்கு செம நியூஸ்..வெள்ளிக்கிழமை மட்டும் 11 மணிக்கு ஆபிஸ் வந்தால் போதும்.. புதுச்சேரி அரசு அதிரடி
புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமையில் இரண்டு மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரியில், ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டு நாட்கள் பயிலரங்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் வெள்ளிக்கிழமை பூஜைகள் மேற்கொள்ள, காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறினர். சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம் என்றும் தெரிவித்தனர்.