குத்துச்சண்டை வீரர்கள் போல மூர்க்கத்தனமாக சண்டை போட்ட மாணவர்கள் - தடுக்காமல் ரசித்த நண்பர்கள்
கடலூர் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவத்தில், பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் அளித்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு இடையே பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, மாணவர்கள் இருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் பரவியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்து மன்னிப்புக் கடிதம் அளித்து மீண்டும் கல்வியைத் தொடரலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னிப்பு கடிதம் வழங்காத 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு இன்னும் வரவில்லை என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்த விவகாரம் கையாளப்படுவதாகவும் பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.