"கர்ப்பம் ஆக்க ரூ.25 லட்சம் சம்பளம்".. "QR Code-ல் அனுப்பிய ரூ.49 ஆயிரம்"- இளைஞரை குறி வைத்த அந்த கும்பல் - அம்பலமான பகீர் சம்பவம்
புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி புரிந்துவரும் சாஜன் பட்டாராய் என்ற நேபாள இளைஞருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பெண்களை கர்ப்பம் ஆக்குவதற்கான வேலை காலியாக இருப்பதாகவும், அவ்வாறு அனுப்பும் பெண்களை கர்ப்பம் தரிக்க வைத்தால் 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வேலைக்கு பல்வேறு நடைமுறை இருப்பதால், முன் பணமாக 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய சாஜன், மோசடி கும்பல் அனுப்பிய க்யூ-ஆர் கோர்டை ஸ்கேன் செய்து, தனது வங்கி கணக்கில் இருந்த 49 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாந்ததை உணர்ந்த சாஜன், பணிபுரியும் விடுதியின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் ராஜஸ்தானில் இருந்து மோசடி நடந்ததும், மோசடி கும்பலின் வங்கி கணக்கு முடக்கம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.