ரூ.3 கோடி மோசடி - கம்பி என்னும் உரிமையாளர்
தேனி அருகே தங்க நகைகளை வாங்கி பணம் தராமல் சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் நகைக்கடை உரிமையாளரை போலீசார் சிறையில் அடைத்தனர்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகைக்கடை நடத்தி வந்தவர் முருகபாண்டி... இவரிடம் மதுரையைச் சேர்ந்த நகை வியாபாரியான வீரமணிகண்டன், சுமார் 16 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொடுத்துள்ளார். ஆனால், நகைகளுக்கு முருகபாண்டி பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதேபோல் மற்ற நகை வியாபாரிகளிடம் நகை வாங்கியும், பொதுமக்களிடம் நகை தருவதாக பணம் வாங்கியும் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு முருகபாண்டி மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2 பிரிவுகளில் முருகபாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகளிலும் முருகபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் சிறையில் அடைத்தனர்.