சிறையிலிருந்து தப்பித்த கொள்ளையர்கள்...சாலை விபத்தில் சிக்கி பலியான கொடூரம்...

x

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலக்காடு சாலை... இரவு அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மேம்பாலத்திலுள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் சாலையில் நிலைதடுமாறி விழுந்திருக்கிறார்கள். நடந்த விபத்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியது.

தகவலறிந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தோடு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதற்குள் அந்த இரண்டு உயிர்களும் சம்பவ இடத்திலேயே பறிபோயிருக்கிறது. இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கியிருக்கிறார்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்திருக்கிறது. விபத்தில் சிக்கி உயிரிழந்த இவர்கள் நாம் நினைப்பதுபோல் சாதாரண ஆட்கள் இல்லை... இரண்டு நாட்களுக்கு முன்பு சுடச்சுட செயின் பறிப்பில் ஈடுப்பட்ட கொள்ளை கும்பல்... விபத்தில் மரண மடைந்தவர்கள் சஞ்சய்குமார், ஹரிமதன். ஹரிமதன் திருச்சியை சேர்ந்தவர். சஞ்சய்குமாரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, காங்கேயம் பாளையம். இவர்கள் இருவருக்கும் கிட்டதட்ட இருபதிலிருந்து இருபத்தைந்து வயது இருக்கும். செயின் பறிப்பில் ஈடுபடுவது, பைக் திருடுவது, வழிப்பறி செய்வது தான் இவர்களின் பிரதான தொழில்.சஞ்சய்குமாரும் அவரது நண்பரும் பழனி, செங்கல்பட்டு, கோவை என பல்வேறு இடங்களில் செயின்பறிப்பில் ஈடுப்பட்டு வந்திருக்கிறார்கள். ஒருவேளை காவல்துறையிடம் சிக்கி சிறைக்குச் சென்றால், போலீஸை ஏமாற்றி அங்கிருந்து தப்பிப்பது ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல...

இப்படியே ஒவ்வொரு ஊராக கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதால் இவர்கள் மீது காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த சூழலில்தான் சஞ்சய்குமாரும் அவரது கூட்டாளிகளும் கொள்ளை சம்பவம் ஒன்றில் சிக்கி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறையிலிருந்து தப்பித்த அவர்கள் பொள்ளாச்சியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி கடைவீதியில் சஞ்சயும் அவரது கூட்டாளியும் , சாலையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த பெண் சுதாரித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் கையில் செயின் சிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளியை தேடிவந்தனர். இந்த சூழலில்தான் சம்பவத்தன்று இரவு பாலக்காடு மேம்பாலத்தில் சஞ்சய் ஹரிமதனை ஏற்றிக்கொண்டு பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். ஒருகட்டத்தில் இவர்கள் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலுள்ள தடுப்புச் சுவரில் பலமாக மோதியிருக்கிறது. அதில் சஞ்சயின் கை துண்டாக இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோயிருக்கிறார்கள். இந்த சம்பவ தொடர்பாக கொள்ளையர்கள் ஓட்டிவந்த பைக்கை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்