அதிகரித்து வரும் கொரோனா தொற்று - சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார். மேலும் தடுப்பூசி செயல்பாடுகள், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அப்போது 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் தடுப்பூசி செலுத்தாத 6 சதவிகித நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இது தவிர காசநோய், கண்புரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.