திடீரென வெண்பொங்கலாக மாறும் அரிசி? - தொழிலதிபர் மனைவி, 16 வயது மகளுக்கு வசியம்... சதுர்வேதி சாமியாரின் அதிர்ச்சி சித்து வேலைகள்

x

பண மோசடி, பாலியல் அத்துமீறல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதுர்வேதி சாமியார், வரும் 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

நித்தியானந்தா, பிரேமானந்தா, சிவசங்கர் பாபா, ஆசாராம் பாபு, குருமித் சிங் ராம் ரஹீம் என ஆன்மீகம் என்ற போர்வையில் பெண் பக்தைகளை வசியப்படுத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிக்கிய சாமியார்களே இவர்கள்...

அந்த பட்டியலில் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் எனக் கூறி பெண்களிடம் சித்து விளையாட்டில் ஈடுபட்டதுடன், ஆட்களை வைத்து மிரட்டி பல வில்லங்கத்திற்கு பேர் போனவராக இருந்தவர் சதுர்வேதி சாமியார்...

தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் பிரசன்னா வெங்கடாச்சாரியார் என்ற சதுர்வேதி சாமியார்.

இந்த அறக்கட்டளையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தி வந்த சதுர்வேதி சாமியார், அந்த நேரத்தில் பெண் பக்தைகளிடம் சித்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அரிசியை வெண்பொங்கலமாக மாற்றி காட்டுவது என கைவித்தைகளை காட்ட, சாமியாருக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இதனிடையே தான், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தொழில் ரீதியாக தனக்குள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்கக்கோரி கடந்த 2004ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியாரை நாடியுள்ளார். அப்போது பிரச்னையை தீர்ப்பதாகக்கூறி, அவர் வீட்டுக்குச் சென்ற சாமியார், அங்கு சிறப்பு பூஜைகள் என்ற பெயரில், வீட்டின் கீழ் பகுதியை வளைத்து போட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது சித்து வேலைகளை காட்டி, தொழிலதிபரின் மனைவி மற்றும் 16 வயது மகளை வசியப்படுத்திய சதுர்வேதி சாமியார், இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வாழ்க்கை மாறிப்போனதை அறிந்த தொழிலதிபர், வீட்டை விட்டு வெளியேறுமாறு கூற, ரவுடியாக மாறிய சதுர்வேதி சாமியார், ஆட்களை வைத்து அவரை மிரட்டியுள்ளார். மேலும், மனைவி மற்றும் மகளை ஆந்திராவிற்கு கடத்திச் சென்றதால், அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் மட்டுமல்லாமல், காங்கேயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திருஞானம் என்பவரிடம், 30 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி, அதனை திருப்பித் தராமல், அடியாட்களுடன் சேர்ந்து கொண்டு தாக்கியதோடு, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

அதன்படி, சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் மட்டும் ஐந்து மோசடி வழக்குகளும், ஒரு பாலியல் அத்துமீறல் வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல், சதுர்வேதி சாமியார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்த நிலையில், வரும் 31 ஆம் தேதி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தன்னை கிருஷ்ணரின் அவதாரமாக கூறிக்கொண்ட சதுர்வேதி சாமியார், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்வது, இதுதான் அவரது ஆன்மீகமா? என பக்தர்களின் கேள்வி எழுப்புகின்றனர். இதனிடையே நீதிமன்ற உத்தரவின்படி சதுர்வேதி சாமியார் ஆஜராவாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்