"தூதரகம் முன்பு தடுப்புகள் அகற்றம்... பாதுகாப்பு வாபஸ்.?" - "பிரிட்டனுக்கு எதிராக இந்தியா பழிக்கு பழி நடவடிக்கை.."- மத்திய அரசு அதிரடி
லண்டனில் இந்திய தூதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட நிலையில், டெல்லியில் பிரிட்டன் தூதரகம் மற்றும் தூதரின் வீடு முன்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் பிரிவினையை தூண்டியதாக காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை போலீஸ் தேடிய நிலையில், லண்டனில் இந்திய தூதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடியை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அகற்றியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரை அழைத்து, கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய தூதரக வளாகங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் பிரிட்டன் அரசின் அலட்சியப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என கடிந்துக் கொண்டது. இந்த நிலையில், டெல்லியில் பிரிட்டன் தூதரகம் மற்றும் தூதரின் வீடு முன்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளது. தடுப்புகள் அகற்றம் குறித்து அரசு தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. லண்டன் தூதரக பாதுகாப்பு விஷயத்தில் பிரிட்டனை பழிக்கு பழி வாங்கும் விதமாக தடுப்புகள் அகற்றப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.